திங்கள், 11 ஆகஸ்ட், 2014

Why Speak Tamil

 
 
நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய பிறகு, இங்கிருக்கும் நண்பர்கள் எல்லாம், “நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடாதீர்கள், தமிழிலேயே உரையாடுங்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தாங்களாகவே ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், நம்முடைய ஆக்ஸெண்ட், இங்குள்ளவர்களின் ஆக்ஸெண்டிலிருந்து வேறுபடும். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படும் என்பது தான். நாங்களும் இந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்தோம். வீட்டில் இப்பவும் தமிழில் தான் குழந்தைகளிடம் உரையாடி வருகிறோம். ஓவியாவிற்கு நான்கு வயது வரை ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. தமிழில் தான் சரளமாக பேசுவார். இந்தியாவிற்கு சென்றபொழுது, அங்குள்ளவர்களுக்கு, அவர் தமிழில் உரையாடுவதை கண்டு ரொம்ப ஆச்சிரியம். இப்பொழுது அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, வீட்டில் எங்களிடம் அவர் அறியாமல் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிடுவார், நாங்களோ, நீ தமிழில் பேசினால் தான் நாங்கள் பதில் கூறுவோம் என்று சொல்லியிருப்பதால், ஆங்கிலத்தில் பேசிவிட்டு, உடனே அதனை தமிழாக்கம் செய்து விடுவார். அதனால் அவரைப் பொறுத்தவரை எங்களுக்கு பிரச்சனை இல்லை.
ஓவியா இரண்டு வயதிற்குள்ளாகவே பேச ஆரம்பித்துவிட்டார். ஆனால் இனியாவோ கொஞ்சம் தாமதமாகத்தான் பேச ஆரம்பித்தார். அதுவும் வாக்கியமாக இல்லாமல் வார்த்தைகளாகத் தான் பேச ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்திலிருந்தே அம்மாவுடனே இருப்பார், அதனால் பழக்கம் வர வேண்டும் என்பதற்காக, இரண்டரை வயதிலேயே அவரை இங்குள்ள டேகேருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற குழந்தைகளோடு பழக வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பினால், அங்கு அவர் ஆங்கிலத்தை வெகு விரைவாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார். இதனால் அவருக்கு தமிழில் பேசுவதைக்காட்டிலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எளிதாகிவிட்டது. நாங்கள் என்னத்தான் அவரிடம் தமிழில் பேசினாலும், அவரால் ஆங்கிலத்தில் தான் பேச முடிகிறது. தமிழில் பேசுங்கள் என்று கூறினால், ஆங்கிலத்தில் வாக்கியமாக பேசியதையே, தமிழில் வார்த்தைகளாக பேசுவார். இதில் கொடுமை என்னவென்றால், அக்காவும் தங்கையும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது தான். ஓவியாவிடம், இனியாக்கிட்ட தமிழில் பேசுங்கள் என்று கூறினால், அவளுக்கு தமிழ் தெரியாதுப்பா என்று கூறிவிடுகிறார்.
 
எனக்கு குழந்தைகள் மம்மி, டாடி என்று கூப்பிட்டால் சுத்தமாக பிடிக்காது. அதனால் இருவரும் எங்களை அப்பா, அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். ஓவியாவிற்கு, தன்னோட ஃபிரண்ட்ஸ் எல்லோரும் மம்மி டாடி என்று தான் கூப்பிடுகிறார்கள், ஏன் தான் கூப்பிடக்கூடாது என்று பெரிய சந்தேகம். அவர்கள் மொழியில் அப்படி கூப்பிடுகிறார்கள், நம் மொழியில், அம்மா, அப்பா என்று தான் கூப்பிடவேண்டும் என்று புரிய வைத்தோம். இனியாவிற்கும் தெரியும், அவ்வாறு கூப்பிடக்கூடாது என்று. வேண்டும் என்றே எங்களை சீண்டுவதற்காக, மம்மி, டாடி என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் திரும்ப மாட்டோம். உடனே, பக்கத்தில் வந்து,முகத்தைப் பார்த்து டாடி என்று நக்கலாக சிரித்துக்கொண்டே கூப்பிடுவார். என்னிடமிருந்து பதில் வரவில்லையென்றவுடனே, அப்பா என்று கூப்பிட ஆரம்பித்துவிடுவார்.
 இரு நாட்களுக்கு முன்பு, இனியா என்னிடம் ஆங்கிலத்தில் வாயை மூடாமல் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார். கடுப்பாகிப்போன நான், நீ முதல்ல தமிழ்ல பேசு என்று சொன்னேன்.
    
உடனே, அவர் Why Speak Tamil” ப்பா என்று ஒரு கேள்வியை கேட்டார். நான் ஒரு நிமிடம் ஒன்றும் பேசத்தெரியாமல் அப்படியே நின்றுவிட்டேன். பிறகு சுதாரிச்சு, அப்பாவுக்கு இங்கிலீஷ் தெரியாதுடா, அதனால நீங்க தமிழ்லேயே பேசுங்க என்றேன். உடனே, அவர் ஓவியாவிடம், “அப்பா doesn’t know Englishக்கா” என்று சொன்னார். அதற்கு ஓவியா, “இனியா , அப்பா knows English” என்று கூற, உடனே, இவர் நோக்கா, அப்பா doesn’t know என்று மாறி மாறி கூற, எனக்கு englsih தெரியுமா,தெரியாதான்னு  ஒரு பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
 
 

(இப்படி இருக்கும் குழந்தை தமிழ் அதிகம் பேசாது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்த வருடம் நடைபெற்ற சேக்கிழார் விழா நாடகத்தில் முதன்முறையாக இனியாவும் மேடையேறி வசனம் பேசாமல் நடித்தார்கள். அதை பற்றிய பதிவு பிறகு எழுதுகிறேன்)
 
நான் மனதுக்குள்,“வா மகளே வாWhy Speak Tamil ப்பான்னா” கேக்குற, அடுத்த வருஷம் தமிழ் பள்ளியில் சேர்க்கிறேன், அதுக்கு பதில் அப்பத்தெரியும் உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 5 (3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை)





ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs)  என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன்.